
ரெயிலில் தீப்பற்றியது உடனே கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கன்ஸ்ரோ அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சி-4 பெட்டியில் தீப்பற்றியது உடனே கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்தில் சி-4 பெட்டி முற்றிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும், பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் டிஜிபி தெரிவித்தார்.