இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் - வானிலை மையம் தகவல்

இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் - வானிலை மையம் தகவல்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

 

 
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிக அளவு வெயிலின் தாக்கம் இருக்கும்.

வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

சத்தீஸ்கர் மற்றும்  ஒடிசாவில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., ஜார்க்கண்டில் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் அதிக வெப்பநிலை பதிவானது. இவற்றில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவில் அதிகம் வெப்பம் பதிவானது.

கடந்த 121 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை தென்னிந்தியாவில் கடந்த ஜனவரியில் பதிவானது.

கடந்த 1919-ம் ஆண்டில் இது 22.14 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடந்த 2020-ம் ஆண்டில் இது 22.93 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. மத்திய இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 1982-ம் ஆண்டுக்கு பின்னர் 14.82 டிகிரி செல்சியஸ் பதிவானது.

கடந்த 1958-ம் ஆண்டில் 121 ஆண்டில் இல்லாத வகையில் 15.06 டிகிரி செல்சியஸ் பதிவானது என குறிப்பிட்டுள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்து விட்டது. எனவே, கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.