சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை - நிதி அமைச்சு (காணொளி)

சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை - நிதி அமைச்சு (காணொளி)

இறக்குமதி சீனிக்கான வரியை குறைத்தன் ஊடாக, அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வரி திருத்தம் ஊடாக அரசாங்கத்துக்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஜே.வி.பி  உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்துள்ளது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று இந்த மனுவை தாக்கல் செய்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபரும், பிரதமர், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பெயரிப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த மோசடியானது குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரஜைகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பாரியதொரு மோசடியாகும்.

எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தையில், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை தற்போது 130 ரூபாவாக உள்ளது.

எனினும், இறக்குமதியாளர்களின் கூற்றின்படி, சீனி கிலோ ஒன்றை இறக்குமதி செய்வதற்காக 93 ரூபா செலவாகிறது.

இறக்குமதி வரி திருத்தப்பட்டமையினால், மக்களுக்கு கிடைக்கவேண்டிய இலாபம், அரசாங்கத்துக்கு நெருக்கமான சில இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் கிடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது