நிதி மோசடி தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்ய ஜே.வி.பி தயார்

நிதி மோசடி தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்ய ஜே.வி.பி தயார்

சீனி இறக்குமதியின் போது 15 தசம் 9 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்வதற்கு ஜே.வி.பி தயாராகின்றது.

அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால் நாளை இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் அதில் பிரதிவாதிகளாக பெயரிப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைத்த தீர்மானம் காரணமாக, அரசுக்கு கிடைக்கவேண்டிய 15 தசம் 9 பில்லியன் ரூபா இல்லாமல் போயுள்ளதாக நிதியமைச்சினால் நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி, நாளை முற்பகல் மனுதாக்கல் செய்யவுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் மாகாண சபை உறுப்பிகர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே குறித்த வரி நிவாரணம் வழங்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்