
வாடிக்கையாளரான பெண்ணைத் தாக்கிய உணவு விநியோக ஊழியர்!
உணவை தாமதமாக கொண்டுவந்த விநியோக ஊழியருடன் நடந்த வாக்குவாதத்தில் வாடிக்கையாளர் பெண் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கைப்பேசி செயலி மூலம் மாலை 3.30 மணியளவில் உணவொன்றுக்கான கட்டளையை அனுப்பியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட உணவு நீண்ட நேரம் ஆகியும் வந்தடையாததால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உணவை கொண்டு வந்த ஊழியர் அவர் வீட்டின் கதவை தட்டி, உணவை குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
உணவை காலதாமதமாக கொண்டு வந்தது தொடர்பாக குறித்த பெண்ணுக்கும், விநியோக ஊழியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படத்தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஊழியர் அப்பெண்ணை தீடீரென தாக்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மூக்கில் இரத்தம் சொட்டச் சொட்ட குறித்த பெண் தனக்கு ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசி காணொளி பதிவொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த உணவு விநியோக நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் சமந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது