ஓர் ஆசனத்தைக்கூட வெற்றி பெற முடியாதவர்கள் எம்மை விமர்சிக்கின்றனர்: இரா.சம்பந்தன்

ஓர் ஆசனத்தைக்கூட வெற்றி பெற முடியாதவர்கள் எம்மை விமர்சிக்கின்றனர்: இரா.சம்பந்தன்

“பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனத்தைக்கூட வெற்றிபெற முடியாத மாற்று அணியினர், எம்மை விமர்சிக்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மாற்று அணிகள் என்ற பெயரில் களமிறங்கியுள்ள தமிழ்க் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் ஓர் ஆசனம் கூடப் பெறுவது சந்தேகமே. அப்படிப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது அதன் தலைமையையோ விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள்.

இவர்களுக்குத் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஓர் அணியாகத் தேர்தலில் களமிறங்கியிருக்கலாம். ஆனால், இவர்களோ பிரிந்து, பிரிந்து நின்று போட்டியிடுகின்றார்கள். தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில்தான் இவர்கள் இவ்வாறு பிரிந்து நிற்கின்றார்கள். தேர்தலில் இவர்களுக்குத் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளினால் பதிலடியைக் கொடுப்பார்கள். போலித் தமிழ்த் தேசியம் பேசித் திரிபவர்கள்தான் இந்த மாற்று அணியினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது மட்டும்தான் இவர்களின் வேலை.” என்றுள்ளார்.