
கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்தமாதம் வெளியாக்கப்படவுள்ளது
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்தமாதம் வெளியாக்கப்படவுள்ளது.
தொழிலுறவு ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்தார்.
நீண்டகாலமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுவந்தது.
ஆயிரம் ரூபா நாளாந்த வேதனக் கோரிக்கை வலுப்பெற்ற சூழ்நிலையில், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இந்த விடயம் தீர்த்துக்கொள்ள முடியாத போனமையால், அந்த விடயம் தற்போது சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை தொழில் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதேநேரம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுகின்ற நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் ஏலவே அறிவித்திருந்தன.
இதற்கான அறிவிப்பையும் தொழில் ஆணையாளருக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எழுத்துமூலமாக வழங்கியுள்ளன.
இந்தநிலையில் குறித்த கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அது அடுத்தமாதம் வெளியாக்கப்படும் என்றும் தொழிலுறவு ஆணையாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்று தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 900 ரூபாவும் வாழ்கை செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் மாத்திரம் வழங்கப்படவுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்