
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்த ரூ.2.80 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேபாள நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி கொண்டு ஆசாமி வரவுள்ளதாக காந்திவிலி போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போரிவிலி சஞ்சய்காந்தி தேசிய பூங்கா நெடுஞ்சாலை பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் கையில் பையுடன் வந்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் நேபாள நாட்டை சேர்ந்த பிரபேஜ் மகாம்ஜாம் அன்சாரி (வயது23) எனவும், அவர் வைத்திருந்த பையை போலீசார் வாங்கி பிரித்து பார்த்தனர். இதில் 14 கிலோ எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சம் ஆகும்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.