கழுத்து வெட்டப்பட்ட யுவதியின் தலையை வீட்டுக்கு கொண்டு சென்றாரா பொலிஸ் அதிகாரி?
பொலிஸ் அதிகாரியால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்த யுவதியின் சடலத்தை குறித்த பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளாரா என்ற கோணத்தில் பொலிஸார் தமது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர், பையொன்றில் இட்டு, தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தரின் சொந்த ஊரான படல்கும்புர பகுதியிலுள்ள அவரது வீட்டு தோட்டத்தில் பொலிஸார் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது, வீட்டு தோட்டத்திலிருந்து இரத்த துளிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இரத்த துளிகள் குறித்த பெண்ணினுடையதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த இரத்த துளியுடன், பெண்ணின் இரத்த மாதிரி ஒத்து போகுமேயானால், தலை பகுதியை பொலிஸ் உத்தியோகத்தர் படல்கும்புரவிற்கு கொண்டு சென்றுள்ளமையை உறுதிப்படுத்தலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய, டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜித் பெதுருஆராய்ச்சி, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜித் மெத்தாகந்த, டாம் வீதி குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர், படல்கும்புர பகுதியை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.