
ஜூலையில் மாகாணசபைத் தேர்தல்? இராஜாங்க அமைச்சர் தகவல்
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமைப்படி எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் குறித்து கருத்துரைப்பதற்கு எதிர்க்கட்சியினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் தார்மீக உரிமை கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை இம்மாதத்தில் இரண்டாம் வாரத்தில் நடத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் மாகாண சபை தேர்தலை நடத்தும் அளவிற்கு அப்போது வளங்கள் காணப்படவில்லை.
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தும் யோசனையை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் கடந்த டிசெம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைத்தார்.
இந்த யோசனை குறித்து அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. ஆகவே வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா தாக்கம் தற்போது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் முழுமையாகன பின்பற்றுகிறார்கள். ஆகவே இவ்வாறான பின்னணியில் மாகாண சபை தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்தி எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தேர்தல் முறைமையினை முழுமையாக தேர்தல் முறைமைகளில்செயற்படுத்தலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய ஆலோசனை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடுவதாக எதிர் தரப்பினரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள். மாகாண சபை தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை இவ்விரு தரப்பினருக்கும் கிடையாது.
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் படுதோல்விடைந்தது. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அதிலும் தோல்வியடைய நேரிடும் என்பதை நன்றி அறிந்து மாகாணசபை தேர்தல் திட்டமிட்ட வகையில் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.
அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து செயற்படும். கடந்த அரசாங்கம் செய்த தவறை தொடர வேண்டிய தேவை கிடையாது.மாகாணசபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். நாட்டு மக்கள் தமக்கான மாகாண சபை பிரதிநிதிகளை ஜனநாயக முறைக்கமைய தெரிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் டலஸ் அழகப் பெருமன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.