பயணப் பட்டியலிலிருந்து அமெரிக்காவின் பெயரை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

பயணப் பட்டியலிலிருந்து அமெரிக்காவின் பெயரை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்புற எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், அதன் எல்லைகளுக்கு அப்பால் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.

அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் நாடுகள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய பயணத் தொழில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகள் அனுமதி ஒப்புதலுக்காக குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.