பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் வாசிப்பு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் வாசிப்பு

2016 ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால் செலுத்தப்பட்ட ஜீப் ரக வாகனம் சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞர் மீது மோதி தப்பி சென்றமை, போலி சாட்சியம் சோடித்தமை, சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் வலல்லேவின் முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

கொவிட் 19 தடுப்பூசியினை ஏற்றிக்கொள்வதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு செல்வதால் அவர், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்திருந்த சந்தீப் சம்பத் குணவர்தன இன்றைய தினம் முதல் முறையாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.