அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் - மார்ச்.3, 1847

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார்.

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.

இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது

இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்.

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்தபோது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்.

அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது. பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் "வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்." என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.

அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை  என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர்[, மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை