மிகார குணரத்ன தாக்கப்பட்ட சம்பவம்; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

மிகார குணரத்ன தாக்கப்பட்ட சம்பவம்; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகனான, இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன, காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இரவு பேலியகொடை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் அவர் கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது சகோதரரின் சேவையாளருக்கு உணவு பொதி வழங்க சென்றிருந்த நிலையில், மிகார குணரத்ன தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்து.

இதனை தனியானதொரு சம்பவமாக கூற முடியாதெனவும், இதற்கு முன்னர் அவரது சகோதரரான சட்டத்தரணி சரித்த குணரத்னவின் தொழிற்சங்க சேவைக்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்சார் அல்லது வேறு எவருக்கும் எதிராக காவல்துறையினரால் இவ்வாறு செயற்பட முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், காவல்துறை பரிசோதகர் ஒருவரும், கான்ஸ்டபிள்கள் மூவரும், நேற்று பணித்தடைக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.