அலுவலக நேரங்களில் வருகிறது புதிய மாற்றம்
அலுவலகம் ஆரம்பிக்கும் நேரங்கள் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
காமினி செனவிரத்ன தலைமையில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கலாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குறித்த குழுவின் பரிந்துரை அடங்கிய அறிக்கையை இன்றைய தினம் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை அமைச்சர் ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.