
கேரள மாநிலம் இடுக்கி அருகே பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ராஜகுமாரி பகுதியில் பவர்ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அந்த பெண்ணின் உடலை மீட்டு அவர் யார்? அவரை கொன்றது யார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இடுக்கி அருகே உள்ள வண்டிப்பாரா பகுதியை ரேந்த ராஜேஷ்-ஜெஸி தம்பதியின் மகள் ரேஷ்மா (வயது17) என்பதும், பிளஸ்-2 மாணவி என்பதும் தெரிய வந்தது.
மாணவி கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போது, மாணவியும் அவரது உறவினரான அம்புஜான்சன்-சாந்தா தம்பதியின் மகன் அருண்(28) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
ஆனால் மாணவியும், வாலிபரும் அண்ணன்- தங்கை உறவு முறை ஆகும். ஆனால் அதனை மறந்து இருவரும் காதலித்துள்ளனர். அவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான், மாணவி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஆகவே அவரை, வாலிபர் அருண் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன்படி அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை நடந்த அன்று மாணவி ரேஷ்மா மற்றும் வாலிபர் அருண் ஆகிய இருவரும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மாணவி மற்றும் வாலிபர் ஆகிய இருவரும் சென்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்தது.
இதன் மூலம் வாலிபர் அருண் தான், மாணவியை கொலைசெய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாலிபர் அருணை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் இடுக்கி அருகே மதுரப்புழா ஆற்றுப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டின் முன்பிருந்த மாமரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர், பிளஸ்-2மாணவி கொலையில் தேடப்பட்டு வந்த அருண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை கொலை செய்த அருண், போலீசார் தன்னை தேடிவருவதை அறிந்தார். இதனால் கடந்த 2நாட்களாக தலைமறைவாக இருந்துவந்தார். ஆகவே அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், வாலிபர் அருணை பலஇடங்களில் தேடிவந்தனர்.
ஆனால் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்று கருதிய வாலிபர் அருண், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிக்குசென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
தங்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அல்லது மாணவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் மாணவியை வாலிபர் கொன்றிருக்கலாம் என்றும், பின்னர் போலீசில் சிக்கிவிடுவோம் என்று பயந்து தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை வாலிபர் கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் இடுக்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.