ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து சமல் ராஜபக்ஷ விளக்கம்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து சமல் ராஜபக்ஷ விளக்கம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் வணக்கத்திற்குரிய வின்சன்ட் ஜே பெர்ணாந்து இதனை குறிப்பிட்டுள்ளார்.

பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என குறித்த அறிக்கை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபக்குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அமைச்சரவை உபக்குழு இன்று பிற்பகல் 3 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 21 தாக்குததல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவை உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அதில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அங்கத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.