இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கப்பட்டது.

முதலில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 34 நாட்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அறிக்கையில் நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 6,58,674 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,88,007 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,193 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 1,09,63,394 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 97 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 1,56,111 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,896 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,67,741 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,39,542 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.