கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், உலகுக்கே உத்வேகம் அளிக்கிறது - மோடி பெருமிதம்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உலகுக்கே உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

ஐதராபாத்தில் ஸ்ரீராமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 


கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட்டது.

ஆனால் இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், ஒட்டுமொத்த உலகுக்கே உத்வேகம் அளிக்கிறது.

இந்தியா, மனித மைய அணுகுமுறையை பின்பற்றுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களை இந்தியா கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சிகள் ஏழை எளியோர் கண்ணியத்துடனும், வாய்ப்புகளைப் பெற்றும் வாழ்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவின் பொது சுகாதார திட்டங்கள், பல பேரது வாழ்வை தொட்டுள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று வருவதற்கு முன்பே கூட நமது நாடு, நல்வாழ்வு மீதான கவனத்தை அதிகரித்தது.

உலகம் கொரோனா வைரஸ் மருந்துக்கான தேவையில் இருந்தபோது, இந்தியா உலகின் பல நாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைத்தது. இதில் பெருமிதம் அடைந்தது.

தற்போது இந்தியா, கொரோனா வைரஸ் தடுப்பூசியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டில் நல்வாழ்வு மீது செலுத்தும் பார்வையை உலக அளவிலும் செலுத்துகிறோம்.

கொரோனா வைரஸ் காலத்துக்கு பிறகு உலகம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மீது மிகுந்த ஈடுபாடு காட்டும். இந்தியாவை ஆன்மிக மற்றும் ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதில் கவனம் செலுத்துவோம். நமது யோகாவும், ஆயுர்வேதமும் ஆரோக்கியமான உலகத்துக்கு முக்கிய பங்கு அளிக்க முடியும். இதை உலகம் புரிந்துகொள்கிற மொழியில் வழங்குவது நமது நோக்கம். அவற்றின் நன்மைகளை அறிவியல் அடிப்படையில் உலகுக்கு நாம் விளக்குவோம். அதன் பின்னர் இங்கு வந்து புத்தெழுச்சி பெற உலகுக்கு அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு மோடி கூறினார்.