ஆதரவற்றவருக்கு சிறுநீரகம் தானம் செய்த பெண்ணின் தன்னலமற்ற செயலை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த மனாஷி ஹல்தார் (வயது 48) என்ற பெண் தனது சிறுநீரகங்களில் ஒன்றை ஆதரவற்ற ஒருவருக்கு தானம் செய்துள்ளார். உறுப்பு தானம் குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரையால் கவரப்பட்ட அவர், கடந்த 2014-ம் ஆண்டு இந்த தானத்தை செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக சில மாதங்களுக்குப்பின் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் பிரதமர் கூறுகையில், ‘விலை மதிப்பற்ற ஒரு உயிரை காப்பதற்காக உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்த சிறப்பான செயல் என் மனதை தொட்டு விட்டது. தன்னலமற்ற உங்களது இந்த சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இரக்கம் மற்றும் தியாகத்தின் நற்பண்புகள் எப்போதும் நமது கலாசாரம் மற்றும் மரபுகளின் மையமாக உள்ளன’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கருணை மிகுந்த இந்த செயல் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இது உறுப்பு தானத்தை முன்னெடுத்து செல்ல பலருக்கும் ஊக்கமாக அமையும் எனவும் பாராட்டி உள்ளார்.
பிரதமரின் பாராட்டு மனாஷி ஹல்தாருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.