இறுதி அறிக்கை இணையத்தளத்தில்..

இறுதி அறிக்கை இணையத்தளத்தில்..

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள எம்.சி.சி உடன்படிக்கை யோசனைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் அமெரிக்காவின் போர் மூலோபாயத்தின் பங்குதாரராக இலங்கை, மாறியிருப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக குறித்த உடன்படிக்கையை மீளாய்வு செய்த குழு தெரிவித்துள்ளது.

உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்கள் ஊடாக இலங்கையின் அரசியலமைப்பின் சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாக குறித்த மீளாய்வு குழு ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா மிலேனியம் சாவால் கூட்டுறவுடன் கடந்த அரசாங்கம் காலத்தில் கைச்சாதிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சாவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய அந்த குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கையளிக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் எம்.சி.சி யோசனைகள் தொடர்பில் பிரதமர் காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகம் ஊடாக இலங்கை ஒருங்கிணைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள உடன்படிக்கை முறிந்துள்ளதுடன் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மடகஸ்கார் போன்ற நாடுகளுக்கான உடன்டிக்கையின் சலுகைகள் இரத்து செய்யப்பட்ட பின்னரும் உடன்படிக்கையில் இருந்து விலகமுடியாத நிலை ஏற்பட்டதாக குறித்த மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீளாய்வு குழுவின் அறிக்கையில் மக்களின் கருத்துக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் 75 சதவீதமானோர் எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் 7 சதவீதமானோரே அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதி பெறப்படும் வரையில் அந்த சட்டமூலம் பிரசித்தப்படுத்தப்படாமல் இருந்தமை, அதில் சில பகுதிகள் பொது மக்களிடம் இருந்து மறைப்பதற்காகவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்த குழுவின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கீழே உள்ள இணையத்தள முகவரி வாயிலாக அந்த அறிக்கையை பார்வையிட முடியும்...

MCC மீளாய்வு இறுதி அறிக்கை