
ஆட்சியை கவிழ்த்த மியன்மார் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் நியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் நேற்று மீண்டும் இராணுவத்தினரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. மியான்மர் நாட்டின் முக்கிய தலைவரான அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இவரை தவிரவும் நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் மேலும், மியான்மர் நாட்டில் அடுத்த ஓர் ஆண்டுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாக மியான்மார் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மர் மூத்த தலைமை தளபதி மின் ஆங் ஹ்லேங் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மியான்மர் இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயக முறையில் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிகாரம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டிற்கு நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த எவ்வித தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.