சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 7 கிராமசேவகர் பிரிவுகள் மீண்டும் தனிமைப்படுத்தலில்..!

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 7 கிராமசேவகர் பிரிவுகள் மீண்டும் தனிமைப்படுத்தலில்..!

மட்டக்களப்பு - காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராமசேவகர் பிரிவுகளில் இன்று சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 7 பிரிவுகளையும் தேசிய கொவிட் 19 செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு கடந்த டிசம்பர் 31ம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது.

பின்னர் 7 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்ட போதும், 10 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் தன்னிச்சையாக தீர்மானித்து கொவிட் சட்டத்திற்கு முரணாக 7 கிராமசேவகர் பிரிவுகளை இன்று விடுவிப்பதாக அறிவித்தனர்.

இதனையடுத்து எற்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி காவல்துறைமா அதிபர் , இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகள், குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவசரமாக கூடியது.

இதன்போது தன்னிச்சையாக விடுவிக்கப்பட்ட 7 கிராமசேவகர் பிரிவுகளையும் தேசிய கொவிட் 19 செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது