22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி

இங்கிலாந்து கடற்கரையில் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. இதை 4 வயது சிறுமி கண்டு பிடித்தாள்.

டைனோசர் இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்தன. இயற்கை பேரழிவு மற்றும் பல்வேறு காரணங்களால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்தன.

இதற்கிடையே சில ஆண்டுகளாக டைனோசரின் புதை படிவம், எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. இதை 4 வயது சிறுமி கண்டு பிடித்தாள்.

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லில்லி வில்டர் என்ற சிறுமி தனது தந்தை ரிச்சர்ட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு கால் தடத்தை பார்த்த அவள், அதுபற்றி தந்தையிடம் கூறினாள். இதையடுத்து ரிச்சர்ட் உடனே நிபுணர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

நிபுணர்கள் அங்கு வந்து காலடித் தடத்தை ஆய்வு செய்தனர். அது சுமார் 22 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசரின் கால் தடம் என்று தெரிவித்தனர்.

இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்த கால்தடம் 10 சென்டி மீட்டர் நீளம் உள்ளது. இது 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால் தடமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் எந்த வகையான டைனோசர் என கூற முடிய வில்லை என்றனர்.

இதுகுறித்து வேல்சில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் அறிஞர் சிண்டி ஹோவெல்ஸ் கூறும் போது, “இதுவரை இந்த கடற்கரையில் கிடைத்த கால் தடங்களிலேயே இந்த கால் தடம்தான் மிகவும் சிறந்தது” என்றார்.

டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை கண்டறிய இது உதவும். காலடித்தடத்தை சிறப்பாக பராமரிப்பதால் டைனோசர் கால்களின் உண்மையான வடிவத்தை நிறுவ உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.