
அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள்.! (காணொளி)
தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளிலும், சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தில் உள்ள 10 பிரதான வைத்தியசாலைகளில் நேற்று இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் போது 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் முன்னுரிமை பட்டியலின் படி இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் ஊடாக உடலில் ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவபீடம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மூலக்கூற்று உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவன்தரவின் தலைமையில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.