வடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு

வடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த மீனவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கடந்த பத்து நாட்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் கீழ் தனிமைப்படுதப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டதுடன் ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 254 பேரின் மாதிரிகளும் யாழ். போதனா வைத்தியசாலையில் 326 பேரின் மதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.