விமர்சனங்களை விட்டு விலகுங்கள்

விமர்சனங்களை விட்டு விலகுங்கள்

படைத்த இறைவனையும், நம்மை சூழ்ந்து வாழ்கின்ற மானுட சமுதாயத்தையும், முழுமையாக நம்பி செய்து பயணத்தை ஆரம்பிக்கின்றபோது எல்லாமே நல்லதாகவே நடந்தேறும். விமர்சனங்களை விட்டு விலகுங்கள் இயேசு இன்றைய உலகம் எல்லாவிதமான நன்மைகளையும் நிறைவாக பெற்றிருப்பதை போன்று ஏராளமான முரண்பாடுகளையும் பெற்றுள்ளது. நாம் பாராட்டப்படுவதை போன்று சில நேரங்களில் விமர்ச்சிக்கவும் படுவோம். நமக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டு அதற்கேற்ப இறங்குவதற்கு பழக வேண்டும். இதுவே நமது கடமைகளை சரிவர செய்வதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது.

பலமுறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஆபிராம்லிங்கன், முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போது அங்கு நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒரு சிறுமியை அழைத்து பாராட்டினார். நான் ஜனாதிபதி ஆக இவரே காரணம் என்றுரைத்தார். அந்த சிறுமி என்ன செய்தார் தெரியுமா? ஆபிராம்லிங்கன் ஒல்லியான உடல்வாகு கொண்டவர். அவரின் கன்னங்கள் ஒட்டிபோய் முகத்தில் பள்ளங்கள் இருந்தன. அம்மைத் தழும்பு வேறு இருந்தன. இதனை கவனித்த சிறுமி, நீங்கள் தாடி வளர்த்து கொண்டால் உங்கள் முகம் அழகாக, கம்பீரமாக இருக்கும் என்றார். நம்மீது சாட்டப்படும் எல்லா விமர்சனங்களையும் எதிர்மறையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிற்சில சமயங்களில் எங்கிருந்தோ வருகின்ற எளிய யோசனைகள் கூடி நம்மை வளர்த்தெடுக்கின்றது. இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காரியங்களிலொன்று ‘விமர்சனங்கள்‘ விமர்சனங்களை நேர்மறையாக பார்கின்ற சூழலமைவுகளையும் நாம் வளர்த்திட வேண்டும். எல்லாச்சூழல்களிலும் எல்லாவற்றையும் முரண்டு பிடிக்காது பணியாற்றுவதற்கு நாம் பழகிட வேண்டும். சிலரின் கூற்றுக்கள் நமது வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது என்ற எண்ணத்துடன் பார்க்கவும் வேண்டும்.

பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கின்ற எல்லா தனி மனிதர்களின் மீதும் ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவர்களை கீழே தள்ளிவிட பல விதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை கண்டு அஞ்சுவதோ, தடுமாறுவதோ அல்ல நமது வாழ்வின் இலக்கு. மிக தைரியமாக எதிர்கொண்டு வாழ்வின் மூலம் பதில் சொல்வதற்கு அழைக்கப்படுகின்றோம் படைத்த இறைவனையும், நம்மை சூழ்ந்து வாழ்கின்ற மானுட சமுதாயத்தையும், முழுமையாக நம்பி செய்து பயணத்தை ஆரம்பிக்கின்றபோது எல்லாமே நல்லதாகவே நடந்தேறும். எதையும் கண்டு அஞ்சி, பயந்து இவ்வளவுதான் வாழ்க்கை என சோர்ந்திடாது நம்பிக்கையோடு முன்னோறி செல்வோம். நம்மீது வீசப்படுகின்ற எல்லா முட்களும் அகன்று போகும். வாழ்க்கை இனியதாக நமக்குத் தெரியும். அருட்பணியாளர் குருசு கார்மல், கோட்டார் மறைமாவட்டம்.