உங்களுக்கு தெரியுமா கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது.
எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
சரி, இப்போது கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
சத்துக்கள்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
மலச்சிக்கலைப் போக்கும்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
பற்கள் வலுவடையும்
கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அதன் அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
செரிமான மண்டலம் பலமடையும்
கொய்யாப்பழமானது செரிமான மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மேலும் இது மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
போதையை மறக்கடிக்கும்
மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். இதனால் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
புற்றுநோயை தடுக்கும்
கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இத்தகைய பொட்டாசியம் கொய்யாப்பழத்தில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு
கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
இருமல் மற்றும் தொண்டைப்புண்
மழைக்காலத்தில் பலருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். அத்தகையவர்கள் கொய்யா மரத்தின் இளம் கிளைகளை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரினால் வாயை கொப்பளித்தால், அவை விரைவில் குணமாகும்.
ஆரோக்கியமான கண்கள்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
முதுமையைத் தடுக்கும்
கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோல் நீக்காமல் சாப்பிட்டால், அவை முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். அதுமட்டுமின்றி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகவும் மாற்றும்.
ஈறுகளில் வீக்கம்
ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வாயை கொப்பளித்தால், வலி மற்றும் வீக்கம் குறையும்.
குறிப்பு
* கொய்யாப்பழத்தில் இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்று வலியை உண்டாக்கும்.
* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் போதுமானது.
* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.