நாட்டில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகின...!
நாட்டில் மேலும் மூன்று கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதற்கமைய இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொவிட்19 மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளது
அரநாயக்க பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியுமோனியாவில் தீவிரமடைந்தமை சுவாசத் தொகுதி தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில்; அனுமதிக்கப்பட்டிருந்த போது கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நெவில் பெர்ணான்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இதய நோய் நிலைமையாகும் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, மாளிகவாத்தை பகுதியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 தொற்றால் சுவாசப்பை செயலிழந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னாரில் முதலாவது கொவிட் 19 மரணம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக எமது செய்தி பிரிவிற்கு அவர் தெரிவித்தார்.