பிரிமீயர் லீக் கால்பந்து: 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக லிவர்பூல் அணி சாம்பியன்

பிரிமீயர் லீக் கால்பந்து: 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக லிவர்பூல் அணி சாம்பியன்

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து ‘லீக்’ போட்டிகளில் ஒன்று பிரிமீயர் லீக் போட்டியாகும். இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக் போட்டி கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி கடந்த 17-ம்தேதி மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் 20 அணிகள் பங்கேற்ற இங்கிலாந்து பிரிமீயர் 'லீக் 'கால்பந்து போட்டியில் லிவர்பூல் கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. இதன் மூலம் லிவர்பூல் கிளப் பட்டம் வாய்ப்பை பெற்றது.

லிவர்பூல் அணி 31 ஆட்டத்தில் விளையாடி 28 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 86 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. 7 ஆட்டங்கள் இன்னும் எஞ்சி இருக்கும் நிலையில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி 31 ஆட்டத்தில் 20 வெற்றி, 3 டிரா, 8 தோல்வியுடன் 63 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டி தொடக்கப்பட்டு தற்பொழுதுதான் 30 ஆண்டுகளுக்குப்பிறகு லிவர்பூல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 1989-90-ல் இங்கிலாந்தின் பழைய முதல் டிவிஷன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிரிமீயர் லீக் பட்டத்தை அதிகபட்சமாக மான்செஸ்டர் சிட்டி 13 முறை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் அந்த  அணி 2-வது இடத்தை  பிடித்தது.