பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி வந்த தெருநாய்- ஒரு கையை கடித்து தின்ற கொடூரம்

திட்டக்குடியில் ஆண் பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்த தெருநாயை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடியில் பச்சிளம் குழந்தையை தெருநாய் ஒன்று கவ்வி தூக்கி வந்தது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

 

கடலூ்ா மாவட்டம் திட்டக்குடியில் உள்ளது அருந்ததியர் காலனி. இங்கு நேற்று காலை 11.30 மணிக்கு தெருநாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்தது. அதன் பின்னால் 3 தெருநாய்கள் ஓடி வந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து கற்களை எடுத்து அப்பகுதி மக்கள் அடித்தனர். இதனால் அங்குள்ள முட்புதருக்கு அருகே குழந்தையை போட்டுவிட்டு நாய்கள் ஓடிவிட்டன.

 

 

இதையடுத்து அருகே சென்று அப்பகுதி மக்கள் பார்த்த போது, நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. பிறந்து சிலமணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தை, தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருந்தது. மேலும் குழந்தையின் இடது கையை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறி தின்றதற்கான அடையாளம் இருந்தது. இது பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வர செய்தது. பச்சிளம் குழந்தை நாய்களிடம் கிடைக்க செய்யும் வகையில் படுபாதக செயலில் ஈடுபட்ட அந்த கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கப்பட்டனர். தகவல் அறிந்த, திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். எனவே அதுபோன்ற கருக்கலைப்பின் போது, எடுக்கப்படும் குழந்தைகளை வெள்ளாற்றில் புதைத்து வருகிறார்கள். அதுபோன்று தான் இந்த குழந்தையையும் ஆற்றில் புதைத்து இருப்பார்கள். அதை நாய்கள் ஒன்று சேர்த்து தூக்கி வந்து இருக்கலாம். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்று துயரம் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர் அப்பகுதி மக்கள்.

 

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக திட்டக்குடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதன் முடிவில் தான் இறந்த குழந்தை யாருடையது? குழந்தை இறப்புக்கு காரணம் யார்? என்கிற மர்ம முடிச்சுகள் அவிழும். இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.