அடுத்த சில வாரங்களில் சிபாரிசுகளை முன்வைக்குமாறு கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு தொடர்பில் சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பிரதமர் மகிந்தராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் பாதீட்டு திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு , உற்பத்தி மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் அடங்களாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்டக் நிறுவனஙகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டுமென இதன்போது பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான சலுகைகளை நிறுவனங்களுக்கு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதன்போது தங்களுக்கு தேவையான சலுகைகளை அறிக்கைப்படுத்தி பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதமரிடம் கையளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதி பரத் அருள்சாமி எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.