முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடும்
அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான வசதிகளை வழங்குவதோடு அபிவிருத்திக்கு உதவுவது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதும், நிதி வசதிகளை வழங்குவதும், வர்த்தக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியை அழகுக் கலை துறைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான சுமார் 90 ஆயிரம் அழகுக்கலை நிலையங்கள் நாட்டில் உள்ளன. நான்கரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் தங்கியுள்ளன.
அழகுக்கலையை ஒரு வாழ்க்கைத் தொழிலாக சிறப்பாக பேணுவதற்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.