
சென்னையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு முயற்சி தொடர்பான சிசிடிவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய சந்திப்புகள், பிரதான சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனாலும், ஒரு சில இடங்களில் குற்றவாளிகள் தைரியமாக கைவரிசை காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வரும் செயின் திருடர்கள், சாலையோரம் தனியாக நடந்து செல்லும் பெண்களையே குறிவைக்கின்றனர். ஒருவன் பைக்கை ஓட்ட, பின்னால் அமர்ந்து இருப்பவன், கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை பறித்துவிட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் தான் அதிகம் நடக்கிறது. இதில் ஏராளமானோர் நகைகளை இழந்துள்ளனர். திருடர்கள் செயினை பலமாக இழுக்கும்போது கீழே விழுந்து பலத்த காயமும் ஏற்படுகிறது.
அவ்வகையில், நேற்று பட்டப்பகலில் சென்னை தி.நகரில் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயின் பறிப்பு முயற்சி தொடர்பான சிசிடிவி பதிவு மற்றும் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காலையில் தனியாக நடைப்பயிற்சி சென்ற அந்த பெண்ணை நோட்டமிட்ட திருடர்கள், பைக்கில் வந்து செயினை வேகமாக இழுக்கின்றனர். ஆனால் செயின் கையில் சிக்கவில்லை. இழுத்த வேகத்தில் அந்தப் பெண் சாலையில் விழுந்துவிட்டார். இதில் அவருக்கு கை, காலில் காயம் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர் ஓடி வந்து உதவி செய்கிறார். இந்த காட்சி சிசிடிவி பதிவில் உள்ளது.
இதேபோல் பாதிக்கப்பட்ட பெண் பேசும் வீடியோவில், செயின் பறிக்க முயன்றவர்கள் கையில் மிகப்பெரிய கத்தி வைத்திருந்ததாகவும், பிடிக்க முயன்றவர்களை மிரட்டி விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கத்தியை காட்டி மிரட்டும் காட்சி வேறு சிசிடிசி கேமராவில் பதிவாகியிருக்கலாம் என்றும் கூறி உள்ளார். அத்துடன், காலையில் நடைபயிற்சி செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றால் ஆபத்து என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.