வெளிநாடுகளில் உள்ள 52,401 இலங்கையர்கள் தொடர்பில் நேற்று வெளிவந்த தகவல்
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதற்காக 52,401 பேர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
எத்தகைய அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் முறைப்படி கட்டம் கட்டமாக அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளிலிருந்தும் இதுவரை சுமார் பத்தாயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் சூழலை கருத்திற்கொண்டு சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி ஏனையோர் கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்மாதம் 16ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் 117 நாடுகளிலுள்ள 52,401 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு வெளிவிவகார அமைச்சிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாட்டு செயலணி ஆகியவை இணைந்து இதுவரை 38 நாடுகளிலிருந்து 9,580 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அதேவேளை, மேலும் 10 நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி வரையிலான காலத்தில் 10 விமானப் பயணங்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் அதனை உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இலங்கையர்களுக்காக உணவு, மருந்து, பாதுகாப்பு உடை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்திற்காக அரசாங்கம் 42.6 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளது என்றார்.