பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.... சித்ராவின் கணவர் மீண்டும் கைது

சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதை அடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நடிகை சித்ரா. இவர் கடந்த மாதம் 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது, பூட்டிய அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இந்நிலையில் ஹேம்நாத் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

ஹேம்நாத், சித்ரா

 

கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஜே.ஜே.நகர் போலீசார், ஹேம்நாத் மீது ஒரு வழக்கு பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

 

தற்போது அந்த வழக்கு கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மேலும் இருவரிடம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.