
கணக்காய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள கோப் குழு..!
அரச பொதுநிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்றைய தினம் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை பரிசீலனை செய்யவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், இலங்கைப் கணியவளக் கூட்டுத்தாபனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளன.
கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி எதிர்வரும் 06, 08, 19, 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கோப் குழு கூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, ஜனவரி 06 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 08 ஆம் திகதி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் முதலீட்டு முகாமைத்துவம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை, ஜனவரி 19 ஆம் திகதி இலங்கையில் பெற்றோலியத்தை சேமித்துவைத்தல் மற்றும் விநியோகித்தல் பற்றிய கணக்காய்வு அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் ஜனவரி 21 ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பிலும், ஜனவரி 22 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தற்போதைய நிலைமை பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பிலும் கோப் குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது