சீரற்ற காலநிலையினால் 50,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..!

சீரற்ற காலநிலையினால் 50,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 14,970 குடும்பங்களை சேர்ந்த 50,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதற்கமைய கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 14,945 குடும்பங்களை சேர்ந்த 50,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மடட்டகளப்பு மாவட்டத்தில் 13027 குடும்பஙகளை சேர்ந்த 43,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது,

இந்தநிலையில் குறித்த மாகாணங்களில் 4 வீடுகள் முழுமையக சேதமடைந்துள்ளதோடு 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

அத்துடன் 14 பேர் மாத்திரம் தமது இருப்பிடங்களை இழந்துள்ளதோடு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு. வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவு மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாழ்நில பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேநேரம் பதுளை - உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமை மையம் அறிவுறுத்தியுள்ளது