
நாட்டின் அநேக பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!
இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக, அடுத்துவரும் சில நாட்களில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை நிலவர அறிக்கையில் இந்த விடயம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீறறர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, காற்று மற்றும் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.