திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்! நால்வர் பலி - பாகிஸ்தானில் கோரம்

திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்! நால்வர் பலி - பாகிஸ்தானில் கோரம்

பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கில்கிட் பால்டிஸ்தானின் மினிமர்க் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த ஹெலிகொப்டரில் 2 விமானிகள் உட்பட 4 இராணுவ வீரர்கள் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகொப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் அங்குள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்தக் கோர விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்த 4 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.