
தமது உணவு நுகர்வை கடந்த மே மாதத்தில் இருந்து குறைத்துக் கொண்ட இலங்கையின் 30 வீத குடும்பங்கள்
இலங்கையில் 30 வீதமான குடும்பங்கள் தமது உணவு நுகர்வை கடந்த மே மாதத்தில் இருந்து குறைத்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் தெரிவித்துள்ளது.
நிதியத்தின் பிராந்திய அறிக்கையின் படி அரசாங்கள் பல மில்லியன் குடும்பங்களின் இந்த நிலையை போக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் உலகளாவிய தாக்கம் காரணமாக தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்த பிராந்தியத்தில் 600 மில்லியன் சிறுவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்கால சந்ததியினரின் நம்பிக்கைககள் தகர்க்கப்பட்டுவிடும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப்வ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 30 வீதமான மக்கள் தமது உணவு நுகர்வை குறைத்து கொண்டனர்.
80 வீதமானோர் இறைச்சி மற்றும் மீன், முட்டை போன்றவற்றின் நுகர்வை குறைத்துக் கொண்டனர்.
பெரும்பாலான சிறுவர்களுக்கு உரிய ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. 54 வீதமானோர் பழங்கள், மற்றும் மரக்கறிகளின் நுகர்வை குறைத்துக் கொண்டதாக ஜீன் கோப்வ் குறிப்பிட்டுள்ளார்.