வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு, மார்கழி மாத கைங்கர்யம், பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து அபிஷேகம், தோமால சேவை, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.
அதைத்தொடர்ந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்ய நள்ளிரவு 12.30 மணியளவில், ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அலங்கரித்து தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருள செய்தனர்.கோவில் ஊழியர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி உற்சவர்களை முதலில் சொர்க்கவாசல் வழியாகக் கொண்டு வந்து, தங்க வாசலில் பக்தர்கள் வழிபடும் வகையில் வைத்தனர்.
பின்னர் குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து இலவச தரிசனத்தில் சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.