இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும், அவர்களை முன்னேற்றமடைய செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார்.
அலிகார்க் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நினைவு தபால் தலையையும் மோடி வெளியிட்டார்.
நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக கட்டிடங்களுடன் இணைக்கப்பட்ட கல்வியின் வரலாறு இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். வெளிநாட்டு பயணங்களின்போது நான் பல அலிகார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் தாங்கள் அலிகார் பல்கலைக்கழகத்தில் படித்ததாக பெருமையுடன் கூறுவார்கள்
* உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் அலிகார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இந்தியாவின் வளமிகு பராம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றுகின்றனர்.
* 100 வருட வரலாற்றில் அலிகார் பல்கலைக்கழகம் லட்சக்கணக்கானோரை மெருகூட்டி நவீன மற்றும் அறிவியல் ரீதியிலான சிந்தனைகளை வழங்கி சமுதாயத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறது.
* ஒவ்வொரு குடிமகனும் எந்தவொரு பாகுபாடும் இன்றி நாட்டில் நிகழும் வளர்ச்சியின் பலன்களைப் பெறும் பாதையில் நாடு முன்னேறி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து உறுதியளிக்க வேண்டிய பாதையில் நாடு உள்ளது
* மதத்தின் பெயரின் எந்தவொரு குடிமக்களும் கைவிடப்படாத நிலைமையிலும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் பாதை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது,
* கொரோனா காலத்தில் அலிகார் பல்கலைக்கழகம் சமுதாயத்திற்கு செய்த பணிகள் மிகப்பெரியது. இலவச கொரோனா பரிசோதனை, பிளாஸ்மா வங்கி, பிஎம் கேர்ஸ் -க்கு நிதி வழங்குதல் அனைத்தும் சமுதாயத்தின் மிதான கடமைகளை நிறைவேற்றுவதன் தீவிரத்தை காட்டுகிறது.
* கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 70 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையானது, தூய்மை இந்திய, கிராமங்களில் கழிப்பறை கட்டுதல் மற்றும் பெண்கள் பள்ளியில் கழிப்பறை கட்டியதன் மூலம் 30 சதவீதமாக குறைந்துள்ளது.
* அலிகார்க் முஸ்லிம் பல்கலைகழகம் ஒரு நகரத்தை போல் இருக்கும் என என்னிடம் பலர் கூறியுள்ளனர். இங்குள்ள துறைகள், விடுதிகள், ஆயிரகணக்கான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை பார்க்கும் போது, மினி இந்தியாவை போல் உள்ளது. இங்கு பார்க்கும் பன்முகத்தன்மையானது, இந்த பல்கலைகழத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டிற்கும்
பலமாக உள்ளது.
* இந்த பன்முகத்தன்மையின் பலத்தை மறக்கக்கூடாது. பலவீனப்படுத்த முடியாது. தேசம் வளர்ச்சி பெறவும், அதற்கான பணிகளில் ஈடுபடவும் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
* அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில மாணவிகள் சேரும் விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த சாதனைக்கு உங்களுக்கு நான் வாழ்த்துதெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும், அவர்களை முன்னேற்றமடைய செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
* அலிகார் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெஹன் சுல்தான் நவீன முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்க 100 வருடங்களுக்க்கு முன்னாள் இருந்தே பாடுபட தொடங்கினார். இன்று முத்தாலாக் நடைமுறைக்கு தடை விதித்த பின்னர் நாடு அந்த திசையில் சென்றுகொண்டிருக்கிறது.
* கல்வி தன்னுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவை பொருளாதார சுதந்திரத்தை
கொண்டுவருகின்றன. இது அதிகாரமளிப்பை ஏற்படுத்துகிறது.
* ஒரு அதிகாரமுள்ள பெண், ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு முடிவிலும், மற்ற நபர்களை போலவே பங்களிப்பு அளிக்கிறார்.
என தெரிவித்துள்ளார்.