வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5% ஆக குறைந்தது

வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5% ஆக குறைந்தது

இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து வேலைவாய்ப்பின்மை விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலைக்கு திரும்பி இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுலான ஊரடங்கு காரணமாக மார்ச்சில் 8.75 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல், மே மாதங்களில் 23.5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

மே 3ஆம் திகதி நிறைவடைந்த வாரத்தில், உச்சபட்சமாக 27.1 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஜூனில் ஊரடங்கு தளர்வுகள் அமுலான பின், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. சி.எம்.ஐ.இ சி.இ.ஓ மகேஷ் வியாஸ் கூறியதாவது:

‛ஜூன் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் முதலில் 17.5 சதவீதத்தில் இருந்து 11.6 சதவீதமாக குறைந்தது. தற்போது 8.5 சதவீதமாக குறைந்துள்ளது.

குறிப்பாக நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவை சந்தித்த போதிலும், கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலையை விட சற்று அதிகமாக இருக்கிறது. தற்போதைய 8.5 சதவீதம் ஊரடங்கிற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் ஒன்பது சதவீத சராசரியை விட அதிகமாக உள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகபட்சமாக 25.83 சதவீதம் இருந்தது. ஜூன் 12ம் திகதி முடிவடையும் வாரத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.

கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் மிகப்பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது. இனி வரும் மாதங்களில் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 21ம் திகதி முடிவடைந்த வாரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.25 சதவீதமாக சரிந்துள்ளது.

இது ஊரடங்கிற்கு முந்தைய மார்ச் 22ம் திகதி இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதமான 8.3 சதவீதத்தை விட குறைவாகும். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் முறையே சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதமான 7.34 சதவீதம் மற்றும் 8.4 சதவீதத்தை விடவும் குறைவாகும். மேலும் கடந்த 13 வார ஊரடங்கு காலகட்டத்தில் இருந்த சராசரியான 20.3 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.

ஊரடங்கு தளர்வை தவிர்த்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலைநாட்களை அதிகரித்ததால் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிக்க ஒரு காரணமாக சி.எம்.ஐ.இ குறிப்பிட்டுள்ளது. அரசு தீவிரமாக ஊரக வேலைவாய்ப்பை பயன்படுத்தினால், வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் குறையுமெனவும் கூறியுள்ளது.