சுற்றுச்சூழல் நலன்சார் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

சுற்றுச்சூழல் நலன்சார் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

நுவரெலிய மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நாளையும் நாளை மறுதினமும் சுற்றுச்சூழல் நலன்சார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிதுல்கல முதல் நுவெரலியா வரையும், நுவரெலியாவில் இருந்து கண்டி வரையும், நுவரெலியாவில் இருந்து பதுளை வரையும் விசேட சுற்றுலா வலயமாக பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அவதானத்தை வென்றெடுக்க கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நுவரெலியா குதிரை பந்தய திடலை அபிவிருத்தி செய்தல், இறம்பொடை மற்றும் தவலம்தென்ன சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கை என்பன நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய நுவரெலியாவில் இருந்து நானுஓயா தொடருந்து நிலையம் வரையில் 3.9 கிலோ மீற்றர் அடங்கிய கேபிள் கார் அமைப்பு பொருத்தப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவிற்கு பிரவேசிக்கும் சுற்றலா பயணிகளுக்காக இவ்வாறான சுற்றுலா வலயத்தின் அவசியம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சுட்டிகாட்டியிருந்தனர்.

இதன் அடுத்தகட்ட கண்காணிப்பு விஜயத்திற்காக பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உபுகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.