கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை -இராணுவத் தளபதி தெரிவித்துள்ள முக்கிய தகவல்
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் கொவிட் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளின் உதவியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று (17) காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
"கொவிட் தொற்றுநோயை அடுத்து இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேலதிகமாக, நாங்கள் படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களை மருத்துவமனைகளாக மாற்றியுள்ளோம்.
எனினும் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் சிலரும் உள்ளனர்.
அரசு மருத்துவமனை வசதிகள், அல்லது மலசலகூட வசதிகள் போன்றவற்றால் அவர்கள் அத்தகைய இடங்களை விரும்புவதில்லை. அவர்கள் தனி அறை வசதிகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். இந்த நிலைமையை ஆராயுமாறு ஜனாதிபதி எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பாக நாங்கள் பல்வேறு கந்துரையாடல்களை மேற்கொண்டோம். நானும் சுகாதார அமைச்சரும் கடந்த வாரம் தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம்.
கொழும்பின் முக்கிய மருத்துவமனைகளுடன் இது தொடர்பில் விவாதித்தோம். அதன்படி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நவலோகா மருத்துவமனை மற்றும் லங்கா மருத்துவமனைஇணக்கம் தெரிவித்துள்ளன. அதன்படி, ஒரு ஹோட்டலை சரியான முறையில் மருத்துவமனையாக மாற்றவும், அதை ஒரு சிகிச்சை மையமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை ஒரு மருத்துவமனையாக மாற்றுவோம் என்று நம்புகிறோம், என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.