யாழில் அதிகாலைவேளை பெண்களை குறிவைத்து சகோதரர்கள் நடத்திய வழிப்பறி வெளிச்சத்துக்கு வந்தது
யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் சங்கிலிகள், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரிடம் அறுக்கப்பட்ட சுமார் 3 பவுண் எடையுடைய ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் திருடப்பட்ட ஹங் ரக மோட்டார் சைக்கிள்கள் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சந்தேக நபர்கள் இருவரில் மூத்த சகோதரர் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்துக்கு 4 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து அண்மையில் விடுதலையாகியவர். சகோதரர்கள் இருவரும் இணைந்து அதிகாலை 5.30 மணிக்கும் காலை 6.30 மணிக்கும் இடையில் ஆலயங்கள், வேலைக்குச் செல்வதற்காக வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது 4 சங்கிலி அறுப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நகைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷா சமரக்கோனின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கபிலன், ரஞ்சி, செனவிரத்ன உள்ளிட்டவர்கள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.