ஸ்ரீலங்காவில் தீவிரமடையும் நோய்பரவல்: சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் தீவிரமடையும் நோய்பரவல்: சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவின் பல பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சல் ஆகியன தலைதூக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை இதுகுறித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியன தலைதூக்கியுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்து 12 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளதுடன் 2 ஆயிரத்து 820 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகூடியளவானோர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 43 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 890 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியிலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகூடுதலானவர்கள் பதிவாகியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 744 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 343 பேரும், காலி மாவட்டத்தில் 229 பேரும், கேகாலை மாவட்டத்தில் 193 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் மொனறாகலை மாவட்டத்தில் மாத்திரம் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் எவரும் பாதிக்கப்படவில்லை.

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, கல்முனை மாவட்டங்களில் இருபதுக்கும் குறைவானோர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தீவிரமடைவதை தவிர்ப்பதற்கு ஏற்றவகையில் சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக்கொள்வதில் மக்கள் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.