குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கருணா தெரிவித்துள்ள காரணம்

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கருணா தெரிவித்துள்ள காரணம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

கருணா அம்மானை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை விட கருணா அம்மான் மிகவும் ஆபத்தானவர் என காரைத்தீவு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தேர்தல் பிரசாரமொன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் “ஆம், நான் கொரோனாவை விட ஆபத்தானவனே..! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த காலப்பகுதிகளில் இராணுவத்தின் மாபெரும் காவலறனாக செயற்பட்டு வந்த ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றியபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம், அதேபோன்றே கிளிநொச்சியிலும் இவ்வாறான பல சம்பவங்கள் பல காணப்படுகின்றன.” என கருணா அம்மான் தெரிவித்த கருத்து பாரதூரமானது என தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது மாத்திரமின்றி வழக்குத் தாக்கல் செய்யுமாறும் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரினர்.

இதற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே தனது சட்டத்தரணியின் ஊடாக மேற்குறிப்பிட்ட காரணத்தை தெரிவித்து தற்சமயம் சமூகமளிக்க முடியாது என அறிவித்துள்ளார்.