ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
சிவபெருமானையும், அவரது வாசல் காப்பாளனாக அறியப்படும் நந்திதேவனையும் வழிபடுவதற்கு உகந்ததாக ‘பிரதோஷ வழிபாடு’ உள்ளது. வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திரயோதசி என்று மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ காலத்தில், பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள் என அனைவரும் சிவபெருமானை வழிபட்டு ஆசிபெறுவதாக ஐதீகம். அந்த அற்புத தருணத்தில் நாமும் சிவபெருமானையும், நந்திதேவனையும் வணங்கி, நம் துன்பங்களைப் போக்கிக்கொள்ளலாம்.
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும், பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து, காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்வதோடு, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
11-ம் பிறையாகிய ஏகாதசியில், ஈசன் விஷம் உண்டார். 13-ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான், நடனக் காட்சி புரிந்தது ஒரு சனிக்கிழமை ஆகும். எனவேதான் சனிப்பிரதோஷம் மகத்தான சிறப்பு பெறுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண் டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன ‘நமசிவாய’ ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிர தோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.